தேர்தலில் நின்று ஒரு சீட் ஜெயித்து காட்டட்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், "எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற தேர்தல் வரும் போது ஆட்சி அமைக்க கூட்டணி முயற்சி செய்வர். அதற்கான சந்திப்பு தான் சந்திரபாபு நாயுடு, மு.க. ஸ்டாலின் இடையேயானது. இது அதிசயம் கிடையாது.
அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அதற்கான வியூகங்களை முதல்வர் நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.
ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள். சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். பாஜகவின் அலையை வைத்து தான் முதல்வர் ஆனார்.
மத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடு உள்ளனர். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள். குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர் கட்சிகள் சொல்லலாம். இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்று தங்க தமிழ்செல்வன் கூறி வருகிறார்.
மனிதாபிமானம் மிக்க எளிமையான சாதாரண விவசாயியான எடப்பாடி பழனிசாமி ஆள்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. 2 வருடம் அல்ல, 2,000 ஆண்டுகள் னாலும் இந்த ஆட்சி தொடரும்
கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து விட்டு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்தி பார்க்கிறார். அது எடுபடாது" என்று தெரிவித்துள்ளார்.