scorecardresearch

‘சூப்பர் ஹெச்.ராஜா’வாக உருமாறிய ராஜேந்திர பாலாஜி: இந்த அதிரடி அவதாரம் ஏன்?

ரஜினிகாந்த்- பாஜக திசை நோக்கி ராஜேந்திர பாலாஜி நகர்கிறாரா? என்கிற கேள்வியையும் அவரது பேட்டிகள் எழுப்புகின்றன.

Rajendra Balaji controversy speech, Rajendra Balaji pressmeet video, ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Rajendra Balaji controversy speech, Rajendra Balaji pressmeet video, ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வழக்கமாக ஊழல் புகார்களை விசாரிக்கக் கோரி கவர்னர் மாளிகைக் கதவைத் தட்டும் திமுக. இந்த முறை வேறு காரணத்திற்கான போயிருக்கிறது. இதற்கான காரணகர்த்தா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘இந்துவாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி, தப்பு செய்தவரை கடுமையாக கண்டிக்கிற கட்சியாக எல்லாக் கட்சியும் இருக்கணும்.

ராமபிரானை அவமானப்படுத்தணும். சீதாபிராட்டியை அவமானப்படுத்தணும்… இந்துக்கள் பொறுமை காத்துகிட்டிருக்கான். தூக்கிப் போட்டு மிதிச்சான்னா எவனாவது இந்துக் கடவுளை பேசுவானா? உனக்குப் பிடிச்சாக் கும்பிடு. பிடிக்காட்டி போய்கிட்டே இரு.’ என ஆரம்பித்து ‘சூப்பர் ஹெச்.ராஜா’வாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் தாங்களே பேசத் தயங்குகிற பல விஷயங்களை அமைச்சர் இப்படி அதிரடியாக பேசியதில் பாஜக.வினர் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அதேசமயம், திமுக தரப்பு இதை புகாராக கவர்னர் மாளிகைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் பெயரில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அந்தக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரடியாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளரை சந்தித்து சமர்ப்பித்திருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி மதப் பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசுவதால், அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பதே திமுக கோரிக்கை.


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைகிறவரை வாய்மூடி மௌனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீகமாகப் பலகுரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவர்களை கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா? இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா? இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை சமீபத்தில் அள்ளி வீசியிருக்கிறார்.

திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணமே தவிர மதமோ, அரசியலோ காரணமல்ல என்பதை காவல்துறையினர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ இந்தக் கொலைக்குக் காரணம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று பேசியிருப்பது அப்பட்டமான சட்டவிரோதப் பேச்சாகும். அவரது பேச்சுக்கு என்ன ஆதாரம்? ஒரு அமைச்சரே, ஒரு கொலை குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறினால் காவல்துறையினரின் விசாரணையை பாதிக்காதா? சமீபகாலமாக பா.ஜ.க. வின் ஊதுகுழலாக ராஜேந்திர பாலாஜி மாறியது ஏன்?

ராஜேந்திர பாலாஜியின் பேட்டியைப் பார்க்கின்ற எவரும் இவரை ஒரு மனநோயாளியாகத்தான் பார்ப்பார்கள். எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்கிற அடிப்படை நாகரீகம் கூட அறியாத வகையில் அனைத்துக் கட்சிகளின் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார். இவரது பேச்சை ஆய்வு செய்கிற எவரும் இனி ஒரு நிமிடம் கூட இவர் அமைச்சரவையில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள். ஏனெனில், இவரது பேச்சு மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையிலும், மதங்களிடையே வன்மத்தை வளர்த்து கலவரத்தை உருவாக்குகிற வகையிலும் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது.

ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் ஊடக வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கிறது. இதில் மயக்கமுற்று கிடக்கிற அவர், ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு அருகதை இல்லாத காரணத்தால் ஒரு மனநோயாளியின் உளறலாகவே அவரது பேச்சு இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

மதநல்லிணக்கத்தை குலைத்து, வன்முறையைத் தூண்டுகிற முறையில்; இவரது பேச்சு இருப்பதால் உடனடியாக ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். இப்பேச்சு அரசமைப்புச் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானதாகும். எனவே, முதலமைச்சர் இவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் தலையிட்டு இவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது.’ என கூறியிருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இப்படி கொந்தளிப்பை அளித்துவரும் வேளையில், இந்து அமைப்பினர் பலரும் தன்னை தொடர்புகொண்டு பாராட்டி வருவதாக அவரே கூறுகிறார். அமைச்சர் ஜெயகுமாரோ, ‘இது அதிமுக.வின் கருத்து அல்ல. ராஜேந்திர பாலாஜியின் சொந்தக் கருத்து’ என்கிறார். இன்னொரு பேட்டியில், ‘2021-ல் தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆன்மீக அரசியல் ஆட்சியை பிடிக்கும்’ என்கிறார் அமைச்சர். சில பேட்டிகளில் ரஜினிகாந்தை வெகுவாக பாராட்டவும் செய்கிறார்.

ரஜினிகாந்த்- பாஜக திசை நோக்கி ராஜேந்திர பாலாஜி நகர்கிறாரா? என்கிற கேள்வியையும் அவரது பேட்டிகள் எழுப்புகின்றன. ஆனால் அவரை அறிந்த சிலரோ, ‘இன்றைய அரசியல் சூழலில் இதுபோன்ற பேச்சுகளுக்காக இவர் மீது கட்சியில் யாரும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. எனவே தனது மனதுக்கு தோன்றுகிற விஷயங்களைப் பேசி, தன்னை லைம்லைட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறார் அமைச்சர். மற்றபடி இதற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை’ என்கிறார்கள்.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister rajendra balaji hindutva speech video