பால் மாதிரிகளை தனியார் பால் நிறுவனங்களே எடுக்கவேண்டும் மற்றும் பால் நிறுவனங்கள் குறித்து பேச தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு வேறு அமர்விற்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாகவும், தரம்குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் செய்தியாளர்களுக்கு கடந்த ஆண்டு (2017) அளித்த பேட்டியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டால் தங்கள் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, எங்களின் நிறுவனங்களுக்கு எதிராக பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டைரீஸ் ஆகிய மூன்று தனியார் பால் நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கார்த்திகேயன், ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசக் கூடாது என தடை விதித்தார். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட பால் நிறுவனமே , அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே , அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால் உண்மை வெளி வராது. மேலும் ஏற்கனவே காசியாபாத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை புறக்கணித்து விட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே பால் மாதிரிகளை 3 மாதத்துக்கு ஒரு முறை பால் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல இந்த விவகாரத்தில், என்னை மிரட்ட வேண்டும் என்ற நோக்கில் மனுதாரர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் என்ற முறையில் தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்தேன்.
உச்சநீதிமன்றமே பால் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. எனவே அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களை பாதுகாக்க தனது கருத்துகளை கூறினேன். இந்த விவகாரத்தில் எந்த தனியார் பால் நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டும் தான் கருத்து சொல்லவில்லை.
பொத்தாம்பொதுவாக தான் கருத்தை தெரிவித்தேன் என கூறியுள்ளார். எனவே தற்போது உயர்நீதிமன்றம் பால் நிறுவனங்கள் குறித்து தான் பேசக்கூடாது என பிறப்பித்த உத்தரவானது, ஒரு குடிமகன் என்ற நிலையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தனது பேச்சுரிமையை பாதிக்கிறது என கூறியுள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் எம். வேணுகோபால், எஸ். வைதியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை தங்கள் அமர்வு விசாரிக்க விரும்பவில்லை. எனவே வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.