சினிமாவைப் பாருங்க; அரசியலுக்கு நாங்க இருக்கோம்! - விஜய்யை எச்சரிக்கும் அமைச்சர் உதயகுமார்

திருவிழாவுக்கு வருவோரெல்லாம் சாமி ஆகமுடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்க

விஜய் குறித்து அமைச்சர் உதயகுமார்: ‘சர்கார்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், “சர்கார் படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. ஆனால், ஒருவேளை தமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன். லஞ்சம், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன். தலைவன் ஒழுக்கமாக இருந்தால், மக்களும் ஒழுக்கமாக இருப்பார்கள்… தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. மேலேயிருப்பவர்கள் தவறு செய்யாமல் இருந்தால், கீழே உள்ளவர்கள் தவறு செய்ய வாய்ப்பே ஏற்படாது ” என்று பேசினார்.

ஆளுங்கட்சித் தரப்பை சற்றே உஷ்ணப்பட வைத்திருக்கும் விஜய்யின் இந்தப் பேச்சு தான் தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போதைக்கு ஹாட் டாபிக்.

கடந்தாண்டு ‘மெர்சல்’ படத்தின் ரிலீசுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது, முதல்வர் பழனிசாமி தலையீட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் படம் வெளியானது. இதற்காக விஜய், தனிப்பட்ட முறையில் முதல்வர் பழனிசாமியை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன்பிறகு பாஜக தலைவர்களால் மெர்சல் படம் வேற லெவலுக்கு புரமோட் ஆனது தனிக்கதை.

இந்த நிலையில், தற்போது சர்கார் பட ஆடியோ விழாவில், ‘மேலேயிருப்பவர்கள் தவறு செய்யாமல் இருந்தால் தான், கீழே உள்ளவர்கள் ஒழுங்காக இருப்பார்கள்’ என்று விஜய் பேசியிருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நாங்கள் நாட்டை பார்த்துகொள்ளும் போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்புகிறீர்கள்? சினிமாவில் வசனம் பேசிவிட்டு தூங்குவதை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்?

திருவிழாவுக்கு வருவோரெல்லாம் சாமி ஆகமுடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள். விஜய்யை யார் இப்போது அரசியலுக்கு அழைத்தார்கள், அவர் நடிக்கின்ற வேலையை மட்டும் பார்க்கட்டும். அவர் அரசியலுக்கு வந்தால் தாக்கு பிடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை கிடையாது. நடிகர் விஜய் அரசியலில் குதிக்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறார். விஜய் அரசியலில் குதிக்கட்டும், குதித்து அடிபடாமல் தப்பினால் சரி” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close