2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 50 விழுக்காடு பழங்குடியின பெண்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ரேணுகா சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்களவையில் 2020-ஆம் ஆண்டில் பழங்குடியின (ST ) கல்வியறிவு குறித்த மாநில வாரியான தரவு விவரங்களைத் தருக என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், "தமிழ்நாட்டில் பழங்குடியின ஆண்களின் கல்வியறிவு 54.3% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 46.8% ஆகவும் உள்ளது. இந்திய சராசரியுடன் ஒப்பிடுகையில் ஆண் கல்வியில் 4.7% வும், பெண்கள் கல்வியில் 2.6% வும் குறைவாக உள்ளனர்.
பழங்குடியின ஆண்களில் அதீத கல்வியறிவு கொண்ட பட்டியலில் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது. அதன் எண்ணிக்கை 91.7% ஆக உள்ளது. அதனை தொடர்ந்து, மிசோரம் 91.5%, நாகாலாந்து 80% ஆகவும், இறுதியாக, ஆந்திர பிரதேசத்தில் 48.8 % என குறைவான கல்வியறிவு கொண்டவர் உள்ளனர்.
அதே போல், அதிக கல்வியறிவு கொண்ட பழங்குடியின பெண்கள் பட்டியலில் மிசோரம் 89.5 விழுக்காடுடன் முதலிடத்திலும், லட்சத்தீவு 87.8 விழுக்காடுடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் 37.3 விழுக்காடுடன் கடைசி இடத்திலும் உள்ளது.
லேபர் ஃபோர்ஸ் சர்வே எனப்படும் காலமுறை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பின்படி ஜூலை 2019 முதல் ஜூன் 2020 காலக்கட்டத்தில் இந்தியாவில் சராசரி பழங்குடியினர் கல்வியறிவு விழுக்காடு அளவு 70.6% ஆக உள்ளது. ஆனால், அதில் மாநில வாரியான கல்வியறவு விவரங்கள் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பழங்குடியின மக்களிடம் கல்வியறவை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பழங்குடியின பெண்களிடம் கல்வியறிவை அதிகரிக்க Saakshar Bharat என்ற திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அக்டோபர் 2009இல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மார்ச் 31 2019 வரை அமலில் இருந்தது.
இதுமட்டுமின்றி மத்திய பழங்குடியின அமைச்சகம், என்ஜிஓக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கல்வியறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் பழங்குடியின பெண்களுக்கு கல்வியை கற்றுக்கொடுப்பதற்கான பணிகளுக்கு உதவிகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil