ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவு பெற்று ரேஷன் வழங்கப்படுவதால், கருவிழிப் பதிவு மூலம் ரேஷன் வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
பயோ மெட்ரிக்குடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இதனால், இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதுமடடுமல்ல, கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஒயாசிஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
கருவிழிப் பதிவு செய்வதற்கான டெண்டர் முடிவாகியிருப்பதால், ரேஷனில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி இதுகுறித்து சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்; அப்போது அவர் கூறியதாவது: “பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்க செயல் இழந்து விடுகிறது. அதனால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த 2 மாதத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. பொது விநியோகத் திட்டத்தை சீரமைத்து தமிழக மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக எல்லா ரேஷன் கடைகளிலும் கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை நீக்கி தரமான அரிசி வழங்கப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல, குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு 15 நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை நகல் பெற தபால்துறை மூலம் விண்ணப்பித்தாலே போதும். அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இதன் மூலம், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கருவிழிப்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாவதுடன், ஆன்லைனில் ரேஷன் கார்டு நகலையும் விரைவில் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.