உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க உள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட ரூ.1.98 கோடியில், முதற்கட்டமாக கோவைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.
இதனையடுத்து, கோவையில் சமூக நிதி பங்களிப்பின் மூலம் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த முயற்சி செய்து வருகிறோம். மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசி கொடுத்தாலும், அதனை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கி வருகிறோம்.
கோவையில் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதிக நிதிகளைப் பெற்று கோவை மாவட்டத்தில் அதிகப்படியான இலவச தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.
கோவையில் இதுவரை 11.20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். கோவையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களை விட 20 என்ற எண்ணிக்கையில் தான் தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றை குறைக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை – கேரள எல்லையில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. கோவையில் முதல்வர் தொடர்ந்து ஆய்வுகளை செய்து வருகிறார்.
முதல்வரின் பணிகள் எதிர்காலத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். கோவையில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதற்காக பல நல்ல திட்டங்களை முதல்வர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார். இதனால் குடும்பப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil