/indian-express-tamil/media/media_files/2025/02/09/EkWmggL9ZFynO0ksGLoL.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றி வெறும் ட்ரெய்லர் தான் என்றும், இதற்கான முழுப்படத்தையும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அனைவரும் பார்ப்பார்கள் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் 81-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்நோக்கு நியாயவிலைக் கடை மற்றும் புதிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப் 9) திறந்து வைத்தார். ரூ. 37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த இரு கட்டடங்களும், சென்னை மேயர் பிரியா, அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் மற்றும் கவுன்சிலர் சாந்தகுமாரி முன்னிலையில் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது, "இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் செயல்பாடுகளுக்கு எடை போடுகிற ஒரு எடைத் தேர்தல் தான். முதலமைச்சரின் திட்டங்களுக்கு மக்கள் சரியான எடை போட்டு இருக்கிறார்கள்.
தி.மு.க-வை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் முன்வைப்புத் தொகையை இழந்தது முதலமைச்சரின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. இனி தமிழகத்தில் பெரியார் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் காண்பித்துள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி ஒரு ட்ரெய்லர்தான். முழுப்படத்தை விரைவில் சட்டமன்ற தேர்தலில் காணலாம். 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234-க்கு 234 என்ற வெற்றியை தி.மு.க பெரும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரை அனைவரும் ஒரு தாய் மக்களே. திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக நடைபெறுகிறது. அதில் வரும் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊடகத்துறையினர் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம். இந்த ஆட்சி அனைவருக்கும் ஆன திராவிட ஆட்சி. அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் சில மதவாத அமைப்புகள் பிளவுகளை ஏற்படுத்த நினைக்கின்றன. நமது முதலமைச்சர் இருக்கும் வரை அவர்களின் எண்ணம் நிறைவேறாது" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.