தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு 61வது வயது தொடங்குவதையொட்டி சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/DfToLp4befIPHvtbGQ9n.jpeg)
இத்தளத்தில் பக்தர்கள் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு மிகுந்த இறை பக்தி கொண்டவர். முதல்வர் மு.க ஸ்டாலினின் குட் புக்கில் இருக்கும் அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அத்துறைக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு ஏராளமான பணிகளை செய்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/1r9IRmvrUH8lglAAujr2.jpeg)
மகாசிவராத்திரி திருவிழா, ஆடி மாதம் அம்மன் கோவில் சுற்றுலா, ரட்டாசி மாதம் பெருமாள் கோவில்கள் சுற்றுலா என பல சிறப்பான திட்டங்களை அறிவித்து மக்களின் குட்புக்கில் இடம் பிடித்துள்ளார் சேகர்பாபு. இதனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.கே.சேகர்பாபுவை ஆன்மீகவாதிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். திருக்கோவில் அறப் பணிகள், திருக்கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு, கும்பாபிஷேகங்கள் என அனைத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார் பி.கே. சேகர்பாபு.
இந்தநிலையில், நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு 61வது வயது தொடங்குவதையொட்டி சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவிலுக்கு வந்த சேகர் பாபு, அவரது மனைவி சாந்திக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அமைச்சர் தம்பதி சமேதராக கோபூஜை கஜ பூஜை செய்தனர். பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் கால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.
சஷ்டியப்தபூர்த்தி யாகத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது மனைவி சாந்தி பங்கேற்றனர். அப்போது, வேத மந்திரங்கள் ஓத தனது மனைவி சாந்தி கழுத்தில் சேகர்பாபு திருமாங்கல்யம் அணிவித்தார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் தருமபுரம் ஆதீனம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/KcHgsFDC44FYh7zkifvm.jpeg)
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பலரும் சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தியும், 70ம் வயதில் பீமரத சாந்தியும், 80வது வயதில் சதாபிஷேகம் செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று ஐதீகம் உண்டு. இதனால் பலரும் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுகின்றனர். அந்தவகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு நேற்று சஷ்டியப்த பூர்த்தி பூஜையில் கலந்துக்கொண்டார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“