ஸ்ரீரங்கம் கோயில் 21 கோபுரங்கள் ஆய்வு; கிழக்கு கோபுரம் பழைமை மாறாமல் புதுப்பிக்க உறுதி - சேகர் பாபு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் உள்ள மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் உள்ள மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழுந்தது. அந்தப் பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
Advertisment
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது; "ஒட்டுமொத்தமாக இந்த ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கின்ற 21 கோபுரங்களையும் என்ஐடி ஆய்வு மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இங்குள்ள கோபுரத்தை என்ஐடி ஆய்வு செய்து, அதன் அறிக்கையை ஓரிரு நாட்களில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இடிந்த விழுந்த இந்த கோபுரம் மட்டுமன்றி, இக்கோயிலில் உள்ள 21 கோபுரங்களையும், ஆய்வு செய்து கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்த அறிக்கையையும் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 2015-ம் ஆண்டுதான் ரூ.34 லட்சம் செலவில் இடிந்த விழுந்த கோபுரத்தின் பழுதுபார்க்கும் பணிகள் நடந்திருக்கிறது. தற்போதுகூட, இந்த கோபுரம் சிதிலமடைந்திருப்பதாக ஊடகத்தின் வாயிலாக வந்த செய்தியை அறிந்து ரூ.94 லட்சம் செலவில், மராமத்துப் பணிகளுக்காக ஒரு திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு, அதற்கு ஆணையரிடத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் 3 பிரகாரங்களிலும் இருக்கின்ற மரங்கள் சிதிலமடைந்திருக்கின்றன. அவை அனைத்தையும் மாற்றும் பணிகளையும் செய்ய வேண்டி இருப்பதால், இந்தப் பணிகளை முடிக்க ஓராண்டுக்கு மேலாகும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக, ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாலும், பராமரிப்பு பணிகளுக்கான முதற்கட்டமாக சாரம் அமைக்கும் பணிகள் துவங்கியிருப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"