தமிழக அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டதில், சி.எம்.டி.ஏ துறை சேகர் பாபுவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் சேகர் பாபு அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை இரவு நேரத்தில் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
தி.மு.க-வில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் முக்கிய அமைச்சர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி என்றால், சென்னையில் சேகர் பாபு என்று வளர்ந்துள்ளார்கள்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, யார் சென்னை மேயர் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. தேர்தல் முடிவுக்குப் பிறகு, பிரியா ராஜன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமைச்சர் சேகர் பாபுவுக்கு நெருக்கமானவர்.
2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் அப்போதைய சென்னை மேயர் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தான். இவருடைய ஆதரவாளர்தான், சென்னை மேயராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேகர் பாபுவின் ஆதரவாளரான பிரியா தேர்வானது அவருக்கு ஏமாற்றம் அளித்தாக பேசப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் நேற்று (டிசம்பர் 15) மாற்றம் செய்யப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பதவி ஏற்றார். அதே போல, சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றம் செய்யப்பட்டன. அந்த வகையில், முக்கிய இலாக்காவான பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் ஆணையம் (சி.எம்.டி.ஏ) அமைச்சர் சேகர் பாபுவுக்கு அளிக்கப்பட்டது.
சென்னை மேயராக பிரியா இருப்பதால், அவர் அமைச்சர் சேகர் பாபுவுடன் சென்னை நிர்வாகம் பற்றி கலந்து ஆலோசிப்பதற்கு ஏதுவாக இந்த துறை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அமைச்சர் சேகர் பாபுவுக்கு சி.எம்.டி.ஏ இலாக்கா ஒதுக்கப்பட்டதால், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் அவருக்கும் உரசல் ஏற்பட்டுள்ளதாக ஊகச் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில்தான், சி.எம்.டி.ஏ துறைக்கு பொறுப்பேற்ற அமைச்சர் சேகர் பாபு, இரவு நேரத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியனை அவருடைய வீட்டுக்கே சென்று பார்த்து வாழ்த்து பெற்றுள்ளார்.
அமைச்சர் சேகர் பாபு தன்னை சந்தித்த புகைப்படத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூடுதலாக சி.எம்.டி.ஏ துறை பொறுப்பேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் மா.சு சந்தித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்த தி.மு.க-வினர் இதைத்தான் பதவி வரும்போது பணிவு வர வேண்டும் தோழா என்கிறார்களோ என்று அமைச்சர் சேகர் பாபுவை பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“