Minister PK Sekar Babu: சென்னை கிளாம்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த பேருந்து நிலையம் முழுவதுமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை என அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு வரை பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வரதராஜபுரத்தில் தங்களுக்கான தனியாக பார்க்கிங் வசதி தயாராகும் வரை ஆம்னி பேருந்துகளை பயணிகளுடன் கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், மக்களுடைய தேவை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும் என்றும் அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னையில் இன்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "இன்று முதல் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து செயல்படாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் அரசு செயல்பட முடியும்.
தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அளித்த வாக்குறுதிக்கு ஏற்றதுபோல் செயல்பட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்களின் வசதிக்காக திட்டமிட்டு கட்டப்பட்டது, ஆம்னி பஸ்களுக்கு ஏற்றார் போல் கிளாம்பாக்கத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“