Minister Sekar Babu remark on North Indians : துறைமுகம் எம்.எல்.ஏ மற்றும் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வட இந்தியர்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியதால் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மஹாவீர் இண்டெர்நேஷனல் சென்னை மெட்ரோ என்ற அமைப்பினரின் உணவு வங்கி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் அமைச்சர். அவருடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, “திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளார்கள்” என்று பேசியுள்ளார்.
கணிசமாக இந்தி பேசும் மக்கள் வாழும் இந்த தொகுதியில், “நானும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்ந்து வருகிறேன். வட இந்தியர்களின் வளர்ச்சியை நான் கண்கூட பார்த்துள்ளேன். நீங்கள் அதிகாரம் மிக்கவர்களாக மாறுவதற்கு திராவிட கட்சிகளின் பங்கே அதிகம் இருக்கிறது தவிர பாஜக கட்சியின் பங்கு ஒன்றும் இல்லை. இப்படி இருந்தும் கூட நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்கின்றீர்கள். தயாநிதிமாறன் கூட என்னிடம் கேட்பார், அவர்கள் தான் நமக்கு வாக்களிக்கவில்லையே, அவர்களுக்கு உதவ ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று. அவர்களும் இந்த நிலத்தில் தான் வாழ்கிறார்கள். நான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. அனைவருக்கும் தேவையான உதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் சென்று சேர்வதை உறுதி செய்வது என்னுடைய கடமை என்று நான் கூறுவேன்” என்றார் சேகர் பாபு.
கடந்த காலங்களிலும் எவ்வாறு இந்தி பேசும் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றும், ஆனாலும் திமுக அவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்களை செய்தது என்றும் கூறினார். பாஜக 300- 500 வாக்குகள் வாங்கிய இடத்தில் திமுக வெறும் 50 வாக்குகள் தான் வாங்கியது என்றும் கூறினார். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் அனைத்தையும் திமுக செய்த போதும் அவர்கள் ஏன் எங்கள் கட்சியை புறக்கணிக்கிறார்கள் என்று நான் கேட்கும்போது, அவர்கள் எங்களுக்கு தான் வாக்களித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். முன்னதாக நாங்கள் வாக்குச் சீட்டு மூலம் வாக்குகளைப் பதிவுசெய்தோம், ஆனால் இப்போது நம்மிடம் ஈ.வி.எம் இயந்திரங்கள் உள்ளன, அவை ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிக்கும். நீங்கள் எங்களை புறக்கணித்தாலும் நாங்கள் உங்களை புறக்கணிக்க மாட்டோம், ”என்று அவர் கூறினார்.
பாஜகவினர் கண்டனம்
சேகர் பாபுவின் கருத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் பாஜகவினர். குறிப்பிட்ட இனத்தினரை சுட்டிக்காட்டி அவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதற்காக அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வாக்களித்தல் அவர்களின் விருப்பம். அவர்களுக்கு பணியாற்றுவது உங்களின் கடமை. இது போன்ற அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் எதிராக பாஜக ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதரவாக நிற்கும் என்று வினோஜ் பி. செல்வம் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் இந்த கருத்துகள் கண்டனத்திற்குறியது என்று கூறினார். மேலும் ”தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், இந்தியர்களை அவர்களின் பூர்வீக அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்துவது நமது அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil