Advertisment

'சென்னையில் அடுத்தாண்டுக்குள் 7 புதிய பேருந்து நிலையங்கள்': அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அப்டேட்

சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் புதிதாக 7 பேருந்து நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Minister for Hindu Religious and Charitable Endowments (HR & CE), P K Sekar Babu

சென்னையில் மக்களின் வசதிக்காக வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் புதிதாக 7 பேருந்து நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Advertisment

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள் மற்றும் விரிவாக்க பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பணியாற்றுவது அரசின் போக்குவரத்து துறை எனக் கூறிய அவர், மக்களின் நலனுக்காக பல்வேறு செயல்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருவதாக கூறினார்

மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தை விழாக்காலங்களில் கூட மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் சேகர்பாபு, அங்கு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டதால் இது சாத்தியமானதாக தெரிவித்தார். இதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த காலத்தில் தொடங்கபட்டிருந்தாலும் சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்ததாக அவர் தெரிவித்தார். அதன் பின்னர் பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசால் பயணிகளின் தேவைகள் கேட்டறியப்பட்டு, அவற்றை நிறைவேற்றியதன் மூலம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயலாற்றியதாக சேகர்பாபு கூறியுள்ளார்.

முடிச்சூரில் புதிதாக ரூ. 42 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாகவும், விரைவில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கூத்தம்பாக்கம் பேருந்து நிலையமும் கடந்த காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அமைச்சர் சேகர்பாபு, தற்போது அப்பகுதிக்கு நேரில் சென்று அடிக்கடி ஆய்வு நடத்தி, அதன் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார். குறிப்பாக வரும் மார்ச் மாதம் இதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 7 பேருந்து நிலையங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எடுத்துள்ளதாக சேகர்பாபு கூறியுள்ளார். அதன்படி, பெரியார் நகர், திருவிக நகர், உதய சூரியன் நகர், முல்லை நகர், அம்பத்தூர், ஆர்கே நகர் உள்ளிட்ட இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் விரிவாக்க பணிகள் செயல்பாட்டில் உள்ளதாக அவர் கூறினார். இதில், பெரியார் நகர் பேருந்து நிலையம் முதலமைச்சர் தொகுதியில் அமைந்துள்ளதாகவும், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இதனை, இன்றைய பயணிகள் தேவைக்கேற்ப உருவாக்கி வருவதாக கூறினார்.

மாமல்லபுரம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையங்கள் உள்பட 18 பேருந்து முனையங்களின் பணிகள் ரூ. 1200 கோடி செலவில் நடைபெற்றுவருவதாகவும், அவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக, 7 பேருந்து நிலையங்களை அடுத்தாண்டுக்குள் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக சேகர்பாபு தெரிவித்தார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Minister P K Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment