சென்னை கந்தகோட்டம், முத்துக்குமாரசாமி கோவிலில், 'அறுபடை வீடு' ஆன்மிக பயணத்தில் பங்கேற்கும், 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழி பைகளை வழங்கி, அவர்களின் ஆன்மிகப் பயணத்தை, அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையில், இலவச ஆன்மிக பயணங்களை, அரசு மானியத்தில் அறநிலையத்துறை ஏற்பாடு செய்கிறது. சீனாவில் உள்ள மானசரோவர் புனிதப் பயணம் செல்லும், 500 பேருக்கு தலா 50,000 ரூபாய்; நேபாளம், முக்திநாத் செல்லும், 500 பேருக்கு தலா 20,000 ரூபாய் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், 406 மூத்த குடிமக்கள், 1.05 கோடி ரூபாய் அரசு மானியத்தில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்றும் மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் இரண்டாவது ஆண்டாக நடக்கிறது. இதில், சென்னை, காஞ்சி, வேலுார் மண்டலங்களில் இருந்து, 200 பேர் மூன்று நாள் பயணமாக புறப்படுகின்றனர் என்றும் வரும் மார்ச்சுக்குள், 1,008 பேர் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை நிறைவு செய்வர். இத்திட்டத்திற்காக அரசு, 1.58 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “திருவிளக்கு பூஜை திட்டத்தில் இதுவரை, 47,000 பெண்கள் பயன் பெற்றுள்ளனர். சூரியனார் கோவில் ஆதீனம் நியமனம் தொடர்பாக, சட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் கோவிலில், புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம், டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது” என்று கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாடகி இசைவானி பாடிய பாடல் ஒன்று சர்ச்சையாகி உள்ள நிலையில், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை நிச்சயமாக முதல்வர் அனுமதிக்க மாட்டார். கானா பாடகி இசைவாணி பாடியுள்ள, ஐயப்ப சுவாமி பற்றிய சர்ச்சை பாடல் குறித்து, புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, தவறு இருந்தால் உரிய நடவடிக்கையை எடுக்கப்படும். மதத்தால், இனத்தால், மக்களை பிளவுபடுத்துகிற சக்திகள், இந்த ஆட்சியில் தலைதுாக்க முடியாது.” என்று கூறினார்.
பிரபல பாடகி இசைவாணி 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஐயம் சாரி ஐயப்பா என்ற பாடல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்சையான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில், இயக்குநர் பா. ரஞ்சித், இயக்குநர் லெனின் பாரதி, எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பாடகர் இசைவாணியை இந்துத்துவவாதிகள் கடந்த நான்கு நாட்களாக சமூகவலைதளத்தில் மிரட்டியும், கொச்சைப் படுத்தியும், தொடர்ந்து அலைபேசியில் மிரட்டலும் விடுத்து வருகிறார்கள்.
இசைவாணி இது குறித்த ஆதாரங்களுடன் நேற்று காலை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். புகார் எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது விசாரணையில் இருக்கிறது.
ஆறு வருடத்திற்கு முன் இயற்றப்பட்டு, பல்வேறு மேடைகளில் பாடிய அப்பாடல், நம்பிக்கை என்கிற பெயரில் நிலவும் அசமத்துவத்தை கேள்விகுட்படுத்துகிற பாடல். இசைவாணிக்கு மட்டுமல்ல, அதை கேள்விகுட்படுத்த, விமர்சிக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமையிருக்கிறது.
படைப்புரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிராக மிரட்டல் விடுக்கும் இத்தகையவர்களை கண்டிக்கும் விதமாய், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணியின் பாதுகாப்பு, மற்றும் படைப்புச் சுதந்திரத்தை உறுதி செய்ய, உரிய நேரத்தில் சென்னை மாநகர காவல் துறை முன்வந்து இவர்களை கைது செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“