சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பில் உள்ள நாடக கொட்டகை மீட்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (அக்டோபர் 9) இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தயாநிதிமாறன் எம்.பி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர், சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் ஒருபகுதியாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 60 ஆவது வார்டு அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள உருது பள்ளியை ஒட்டியுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து 57 ஆவது வார்டு, யானைக்கவுனி மேம்பாலம் பகுதி மற்றும் வால்டாக்ஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும், நீர்நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாரும் பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, வால்டாக்ஸ் சாலையில் உள்ள யானைகவுனி பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வட கிழக்கு பருவ மழையை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வால்டாக்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்த நாடக கொட்டகையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/FBPkZWoVQAMkmtV.jpg)
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை மண்ணடியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பை மீட்க கோரிக்கை விடுத்துள்ளோம் உடனடியாக மீட்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார். யானைகவுனி மேம்பாலம் விரைவில் சரி செய்யப்படும். அங்கு உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று கூறினார்.
வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டகையில், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்து உள்ளனர். தற்போது இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி உதவியுடன் இந்த இடம் மீட்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் திட்டங்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்படும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/FBPkZWpUUAE40nT.jpg)
கடந்த 10 ஆண்டுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது உண்டு, ஆனால் தற்போது முதலமைச்சரே தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்களுக்கு நேரில் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறார். வடகிழக்கு பருவமழைக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு சென்னை மாநகராட்சியில் முழுவதுமாக மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்குவதை ஆணையர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். விரைவில் திட்டங்கள் தீட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் எங்கேனும் முறையாக தூர்வாரப்படாமல் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வால்டாக்ஸ் சாலை பக்கிங்காம் கால்வாயில் 5 முகத்துவாரங்களில் 2 தான் செயல்படுகிறது. அனைத்து முகத்துவாரங்களும் செயல்பட வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மழை காலத்தில் பொதுமக்களை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மயானங்களில் லஞ்சம் வாங்கப்படுவதில்லை. லஞ்சம் வாங்குவது குறித்து புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil