சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) சார்பில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வியாழக்கிழமை (ஜூலை 31) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, திரு.வி.க. நகரில் அமைக்கப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகர் பேருந்து நிலையங்கள், சேத்துப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் நவீன சலவைக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடசென்னை வளர்ச்சித் திட்டம் மூலமாக இதுவரை 282 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி மிக முக்கியமானது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) சுமார் 200 கோடி ரூபாய் செலவில், 12-க்கும் மேற்பட்ட புதிய பேருந்து நிலையங்களை அமைத்து வருகிறது. இவற்றில் சில பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
பெரியார் நகர் மற்றும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட மற்றொரு பேருந்து நிலையம் - செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படும்.
முல்லை நகர், உதயசூரியன் நகர், ஆர்.கே. நகர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள் - இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இவை அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
குத்தம்பாக்கம், செங்கல்பட்டு, மகாபலிபுரம் மற்றும் ஆவடி பேருந்து நிலையங்கள் - புதிய வசதிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இவை நிறைவடையும் நிலையில் உள்ளன.
ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம்
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகின்றன. அந்த நிலையம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை விரைவில் தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்து தான் முடிச்சூர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பின் சில காரணங்களை முன்வைத்து அவர்கள் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுத்துள்ளனர்.
இருப்பினும், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2 அல்லது 3 மாதங்களில் திறக்கப்பட்டவுடன் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். மேலும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான 20 கோடி ரூபாயை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே ஒதுக்கியுள்ளது. அந்தப் பணியும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்’, என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.