திருச்சி குண்டூரில் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சந்தூரணி குளத்தை ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "பருவமழை நிலை தொடங்கிய நிலையிலையே, தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதும், கழிவு நீர் அதனுடன் கலந்து வீட்டிற்குள் செல்வது என இவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மழை அதிகளவு பெய்யத் தொடங்கினால், இன்னும் என்னென்ன நாசங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை.
இதனால் தான், கடந்த ஒரு மாத காலமாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் நான் வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். ஆனால், ஆளும் கட்சியினரோ, எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு வேலை இல்லை என விமர்சனம் செய்து, எனது கோரிக்கைகளை கொச்சைப்படுத்தினார்களே தவிர, அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை.
தமிழக அரசு சார்பில் தூர்வாரப்பட்ட ஏரி, குளங்கள் பற்றி வெள்ளை அறிக்கை விட தயாரா?.மழையே பெய்யாத சேலம் மாவட்டத்தில் மழை குறித்த ஆலோசனையை முதல்வர் நேற்று நடத்தி உள்ளார். மழையால் ஏற்படும் வெள்ளத்தையும் தெர்மாகோல் மூலம் அமைச்சர் செல்லூர் ராஜூ தடுப்பாரோ என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. நாளைக்கே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தினாலும், அதனை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.