கோவை கற்பகம் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்றார். அப்போது, "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கக் கூடிய நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்திலும், 1973 சுய உதவிக் குழுக்களுக்கு, இன்று ரூ. 170 கோடி மதிப்பிலான, கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. முதல்வரின் சாதனை திட்டத்தை, பார்த்தால் மகளிரை மையப்படுத்தி தான் இருக்கும்.
கடந்த ஆண்டுகளைப் போலவே வரக் கூடிய ஆண்டுகளிலும் தேவைக்கு ஏற்றார் போல் மின் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின் விநியோகத்தில் எந்த சமரசமும், பாதிப்பும் இருக்காது. இதற்கான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் நிறுவனங்களில் ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் முடிந்த பின்னர் அதற்கான பதிலைக் கூறுவேன். அண்ணாமலை, ஒரு நிலைப்பாட்டில் இருந்ததே இல்லை. காலை ஒரு செய்தி, இரவு ஒரு செய்து என அவர் கூறுவார். தெளிவான முடிவில் அவர் இருப்பது இல்லை. எங்களுக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. அவர்கள் குறித்து பேசுவதற்கு எங்களுக்கு நேரம் இல்லை. இது மக்களுக்கான அரசு.
சிலர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள், அதற்காக கருத்த பதிவு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையாகவே யார் மக்கள் பணி செய்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும்" எனக் கூறினார்.