அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரது சகோதரர் அசோக் குமார், இன்று (ஏப்ரல் 9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திடீரென ஆஜராகி இருக்கிறார்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, அமலக்கத்துறையின் சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக அவர் தலைமறைவாகி இருந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அவர் ஆஜராகி இருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கின் அடிப்படையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டும் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவரது சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருந்ததாகக் கூறி, அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். குறிப்பாக, கேரளா, ஆந்திரா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அவர் வசிக்கலாம் என்று கருதப்பட்டது.
இதேபோல், பல்வேறு இடங்களில் இவர் குறித்த தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. முன்னதாக, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 நபர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்தக் குற்றப்பத்திரிகையின் நகலை வாங்குவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்பேரில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், இன்று திடீரென நீதிமன்றத்திற்கு தனது வழக்கறிஞருடன் ஆஜராகி இருக்கிறார். ஏற்கனவே, அவரை அமலாக்கத்துறை தேடி வந்ததால், இன்று விசாரணை முடிவடைந்ததும் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, முன் ஜாமின் கோரி அவர் மனு தாக்கல் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் இன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதால், இந்த வழக்கின் திருப்புமுனையாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. இதே வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார்.