தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திடீரென நேற்று (மார்ச் 18) டெல்லிக்குச் சென்று இன்று (மார்ச் 19) காலை சென்னை திரும்பிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை சமீபத்தில் தெரிவித்தது. இந்த ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
மேலும், பா.ஜ.க தரப்பில் இருந்து இந்த விவகாரத்தை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில், அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவங்கள் அனைத்தும் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் திடீர் டெல்லி பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக நேற்று மாலை டெல்லிக்குச் சென்ற அவர், இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அமைச்சரின் டெல்லி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் செந்தில் பாலாஜி எதற்காக டெல்லிக்குச் சென்றார்?, அவர் யாரை சந்தித்தார்? என்று கேள்விக் குறியாகியுள்ளது.