‘உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஒன்றும் உலகத் தலைவர் இல்லை’! – அமைச்சர் செங்கோட்டையன்

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை, ஒரு துறையின் செயலாளரை, எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். அதில் ஒன்றும் தவறில்லை

By: Updated: September 9, 2018, 04:18:27 PM

உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஒன்றும் உலகத் தலைவர் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த திருமதி சபீதா IAS மாற்றப்பட்டு அந்தப் பொறுப்புக்கு வந்தவர்தான் உதயச்சந்திரன் IAS . அவர் வந்த பிறகு பள்ளி கல்வித்துறையில் அவரால் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் சமீபத்தில் 24 அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில், உதயச்சந்திரனும் ஒருவர். தற்போது தொல்லியல் துறை ஆணையராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம், ‘ஐஏஎஸ் அதிகாரியான உதயச்சந்திரன் சிறப்பாக செயல்பட்டு வந்தார். கல்வித்துறையில் நல்ல மாற்றங்களை செய்து வந்தார். அவரை ஏன் திடீரென மாற்றினீர்கள்?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “உதயச்சந்திரன் ஒன்றும் பெரிய உலகத் தலைவர் இல்லை. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை, ஒரு துறையின் செயலாளரை, எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உதயச்சந்திரன் ஒன்றும் உலகத் தலைவர் இல்லையே” என்றார் சூடாக.

பள்ளிக் கல்வித் துறையில் உதயச்சந்திரன் கொண்டுவந்த சீர்திருத்தங்கள்:

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாநிலத்திலும் பள்ளியிலும் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களை அறிவிக்கத்தடை.

பன்னிரெண்டாம் வகுப்பில் மொத்தம் 1200 மதிப்பெண்கள் என்றிருந்ததை 600 ஆக குறைத்ததோடு, +1 மற்றும் +2 இரண்டிற்கும் பொதுத்தேர்வு.

புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும் .

486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.

5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.

31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.

திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்

கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா ரூ. 4 கோடி செலவில் நடத்தப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும்

ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்

மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும் கருத்தரங்குகள் ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்

காணொளி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

அரசுத்தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் ரூ.2 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்

மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.72 இலட்சம் செலவில் அமைக்கப்படும்

123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ரூ. 1.84 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

ஆகிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Minister sengottaiyan about udhayachandran ias

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X