அமைச்சர் செங்கோட்டையனுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்

அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்ற மரபை மீறி, அதிமுகவினருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கும் என்று சொல்வது கண்டனத்துக்குரியது.

அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பேசிய அமைச்சர் செங்கோட்டையனுக்கு, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கோபியில் நேற்று நடந்த ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘‘அதிமுக உறுப்பினர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்’’ என்று பேசினார்.

இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற மேலவை திமுக தலைவருமான கனிமொழி எம்.பி. தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறுத்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

’’கோபியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘அதிமுக தொண்டர்கள் கைக்காட்டுபவர்களுக்கே அரசு வேலை கிடைக்கும்’ என்று பேசியுள்ளார். ஒரு அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்ற மரபை மீறி, அதிமுகவினருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கும் என்று சொல்வது கண்டனத்துக்குரியது. அரசு வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தாலும் அதைவிட ஆதிமுக உறுப்பினர் அட்டை தான் பெரியது என்பது இளைஞர்களை மிரட்டும் செயல்.’’

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

×Close
×Close