மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் மாணவியர் தலையில் பூ வைத்தும், கொலுசு அணிந்தும் வருகின்றனர். சில மாணவர்கள், கைகளில் பல வண்ண பட்டை மற்றும் கயிறு அணிந்து வருகின்றனர். இதனால், மாணவ - மாணவியர் இடையே பிரச்னை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியர் பூ சூடி வர, தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை அதிகாரிகள் வழியாக தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல், மாணவ மாணவியர், 'ஜீன்ஸ், டைட்ஸ்' உள்ளிட்ட ஆடைகள் அணியவும், தேவையற்ற அணிகலன்கள் அணிவதற்கும், மருதாணி வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கோபி நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "தமிழகத்தில் 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்.
மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் அரசே 4 சீருடைகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும்.
தமிழக அரசு தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. யூடிப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 628 பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும்.
மேலும் 9 ,10, 11, 12 ஆகிய வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் செய்து கொடுக்கப்படும்" என்றார்.
இதையடுத்து, மாணவிகள் கொலுசு அணிய தடையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும். மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ளது குறித்து என் கவனத்திற்கு வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.