Coimbatore | கோவை மாவட்டம் பூலுவபட்டி பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இம்முகாமில் மக்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், திட்டங்கள் குறித்தும், முகாம் மக்களின் தேவைகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.மேலும் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய அவர், “தமிழக முதல்வர் இலங்கை வாழ் மக்கள் மீது தனி கவனம் செலுத்தி அவருடைய அகதிகள் பெயரை மாற்றி, இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு முகாம்கள் என இணைத்துள்ளார்.
நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு அவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு முதல் கட்டமாக 3,500 வீடுகள், தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 3,500 வீடுகள் என மொத்தம் 7000 வீடுகள் கட்டுகின்ற பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
கோவை பூளுவப்பட்டி முகாமில் 320 குடும்பங்கள் வசிக்கிறார்கள். இங்கே 280 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கு போதிய இடவசதி உள்ள காரணத்தினால், அந்த பணி துவக்குவதற்காக முகாமில் இருக்கிற மக்களிடம் கருத்துகளை கேட்டு அவர்களுடைய ஒப்புதலோடு இந்த பணி துவங்குவதற்காக நேரடியாக சந்தித்து உள்ளோம்.
மேலும் முதலமைச்சருடைய திட்டம் எந்த அளவிற்கு முகாம் மக்களை வந்து சேர்ந்தது என்பதை கேட்ட போது மிக்க மகிழ்ச்சியோடு சொன்னார்கள் போர்வை, உடைகள், பாத்திரங்கள், ரேஷன் கடை பொருட்கள் தவறாமல் எங்களுக்கு வழங்குகிறார்கள் என தெரிவித்தார்கள்.
மேலும் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக பேரூராட்சி நிர்வாகம் இங்கே இருக்கிற மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்கள். ஒரு இடத்தில் சிறுபாலம் உடைப்பு உள்ளது என கூறினார்கள், அதை சீர் செய்வதற்காகவும் புதியதாக கட்டுமானம் பணி செய்வதற்காகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முகாம் மட்டுமல்லாமல் இலங்கையில் இருக்கிற மக்கள் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் தமிழகத்தில் இருந்து தாய் உள்ளத்தோடு மூன்று கப்பல்களில் அரிசி, பால் பவுடர், மருந்துகள் ரூ.172 கோடி மதிப்பீட்டில் கொடுத்து உதவியவர் நமது முதலமைச்சர் அவருக்கு எங்கள் துறை சார்பாகவும் நாங்களும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம்” என்றார்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“