உழவர் பெருந்தலைவர் என்று போற்றப்படும் நாராயணசாமி நாயுடு கோவை மாவட்டம் செங்காளிபாளையம் பகுதியில் பிறந்தவர். விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டவர்.
இந்நிலையில் அவரது பிறந்தநாள் விழா கோவை, சர்க்கார் சாமகுளம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அமைச்சரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் நாராயணசாமி குடும்பத்தினர் சில கோரிக்கைகளைத் தெரிவித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பெருமையாக உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்தனர். நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவாக நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.

அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வரக்கூடிய நூற்றாண்டு விழாவிற்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாய பெருமக்களுக்கு தலைவராக முன்னின்று இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உந்து சக்தியாக இருந்தவர் என்றும் அவர் கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை