அமைச்சர் செந்தில் பாலஜிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (ஜூன்: 13) அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனே அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் நோடல் அதிகாரி டாக்டர் ஆனந்த் கூறியதாவது:
"இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உயர் இரத்த அழுத்தமும், ஈ.சி.ஜி.,யில் மாறுதல்கள் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அமைச்சர் சேகர் பாபு சொன்னது போல அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை", என்று கூறுகிறார்.
தற்போது வெளியான தகவலின் படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil