நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை ஆளும் திமுக தொடங்கியுள்ளது. கோவையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்துள்ளவர்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்தி வருகிறார். கோவையில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற தேர்தல் வியூகம் அமைத்து, வேட்பாளர் நேர்காணல் முதல் வேட்பாளர் தேர்வு வரை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று செய்து வருகிறார். அதனால், கோவை திமுகவில் ஆல் இன் ஆல் அமைச்சர்தான் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக 2 மாதங்களுக்கு முன்னதாகவே, கட்சி தொண்டர்களிடம் விருப்பமனு பெற்றது. இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, சென்னை, மதுரை உள்ளிட்ட சில இடங்களில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியது. தற்போது, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கள்கிழமை முதல் நேர்காணல் நடத்துகிறார்.
கோவையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம் என கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.கார்த்திக் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, கோவை மாநகராட்சியில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் செவ்வாய்க்கிழமை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளவர்கள் இந்த நேர்காணலுக்குப் பிறகு வேட்பாளர்கள் உடனடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணலில் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் திமுக தலைமையகத்திற்கு அனுப்பப்படும். இதையடுத்து, வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. கோவை அதிமுகவின் கோட்டை என்பதை முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதிப்படுத்தினார்.
அதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களையும் வெற்றி பெற்று கோவையை திமுகவின் கோட்டையாக்க வேண்டும் என்று திட்டமிட்ட திமுக தலைமை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி 3 மாதங்களுக்கு முன்னதாகவே கோவையில் தனது பணிகளை தொடங்கிவிட்டார். அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து கோவையில் அனைத்து இடங்களையும் வெற்றிகொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமல்ல, கோவை மாவட்ட பூத் பாக முகவர்கள் 25 பேர் கலந்துகொண்ட பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டி திமுகவினருக்கு தெம்பூட்டியுள்ளார்.
திமுக கோவையை முக்கிய இடமாக கருதுவதால் வேட்பாளர் தேர்வு கடினமாக இருக்கும் என அம்மாவட்ட திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
வேட்பாளர்கள் தேர்வு எந்த அடிப்படையில் இருக்கும் என்று திமுக வட்டாரத்தில் கேட்டபோது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொருளாதார பின்னணி கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனபது ஒரு காரணியாக இருக்கும். அதே நேரத்தில், வாக்காளர்களிடையே வேட்பாளருக்கு இருக்கும் நற்பெயர், கட்சிக்காரர்களிடையே அவர்களுக்கு உள்ள நல்ல மரியாதை ஆகியவை மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில், இரண்டு வாரங்களுக்கு முன், திமுக வேட்பாளர்களை நேர்காணல் செய்யத் தொடங்கியது. சென்னையில் ஆர்.கே.நகர், பெரம்பூர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணாநகர் என பல இடங்களில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், தயாநிதி மாறன் போன்ற மூத்த தலைவர்கள் அடங்கிய குழு இந்த நேர்காணலை நடத்தியது. ஒவ்வொரு வார்டில் இருந்தும் குறைந்தபட்சம் 15 முதல் 25 விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், நேர்காணலுக்குப் பிறகு ஒரு வார்டுக்கு மூன்று பெயர்களை குழு பட்டியலிட்டுள்ளது. வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பப்படும். தற்போது, மதுரை, திருச்சியில் வேட்பாளர் தேர்வு தொடங்கியுள்ளது.
பாஜகவும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. சென்னையில் ஜனவரி 5ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
கோவை, மதுரையிலும், அதைத் தொடர்ந்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பாஜக நேர்காணல்களை நடத்தும். நேர்காணல் முடிந்ததும், கட்சி தலைமை இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு வாரத்துக்கு முன்பு சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சரியான நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.
இப்படி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கின்றனர். அதே நேரத்தில், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அனைத்து இடங்களையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் தேர்தல் வியூகம் அமைத்து, வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் தேர்வு வரை அனைத்தையும் ஆல் இன் ஆல் ஆக நேரடியாக மேற்கொண்டு வருகிறார். அதனால், கோவை திமுகவில் ஆல் இன் ஆல் செந்தில் பாலாஜிதான் என்கிறார்கள் கோவை திமுக வட்டாரங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.