மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடும் முறை எப்போது அமல்படுத்தபடும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வியாழக்கிழமை காலை டெல்லியில் மத்திய மின்சாரத்துறை மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
கேள்வி: நிலக்கரியை மத்திய அரசு குறைவாக கொடுப்பதனால், மின்சார உற்பத்தி ஏதாவது பாதிக்கப்படுகிறதா? அதனால், கூடுதலாக நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்கப்படுகிறதா? அல்லது ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தின்படி அடிப்படையில் நிலக்கரியைக் கேட்கிறோமா?
ஏற்கெனவே, போட்டிருக்கிற ஒப்பந்தங்களின் அடிப்படையில் நமக்கு நிலக்கரிகள் கிடைக்கப்பெறுகின்றபோது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிற நிலக்கரியின் அளவை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். அதனால் ஏற்படுகின்ற கூடுதல் செலவினங்களை நம்மால் தவிர்க்க முடியும். அதனால்தான், ஒதுக்கீடு செய்யப்பட்ட முழு அளவு நிலக்கரியை தமிழ்நாடு மின்சாரத் துறைக்க்கு வழங்க வேண்டும் என்று இப்போது வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
கேள்வி: தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் எப்போதிலிருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
மே 7ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். நடந்து முடிந்த சட்டமன்றத்தின் பொதுத்தேர்தலில் திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 6 மாத காலத்தில் 202 வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். மின்சாரத் துறையில் மாதாந்திர கணக்கீடு என்பது மின்சாரத் துறையில் அதற்கான கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்திட வேண்டும். கணக்கெடுப்பதற்கான பணியாளர்களை அதிகரித்திட வேண்டும். அதே போல, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துகிறபோது, இந்த மாதாந்திர கணக்கீடு என்பது நடைமுறைக்கு கொண்டுவர முடியும். அதற்காகத்தான் இந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத்தின் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில், முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படையாக நிறைவேற்று வருகிறார். இந்த திட்டங்களும் விரைவாக படிப்படியாக முதலமைச்சர் நிறைவேற்றுவார்.
கேள்வி: மின்சாரத் துறை கட்டணம் உயரும் என்று ஒரு தகவல் பரவலாக பரவி வருகிறது. அது உண்மையா? அல்லது அரசிடம் அதுபோல திட்டங்கள் இருக்கிறதா?
தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற முடியாமல், ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, பல்வேறு கருத்துகளை, விமர்சனங்களை அரசின் மீது வைத்து வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் வதந்திகள் மக்கள் மத்தியில் எடுபடாது.
கேள்வி: தங்கமணி வீட்டில் நடந்த சோதனைக்கு நீங்கள்தான் காரணம் என்று அவர் நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்?
இன்று நாங்கள் வரும்போது முதலமைச்சர் மற்றும் டிடி சாரிடம் சொன்னோம். ஒரு நல்ல நோக்கத்துக்காக கடந்த பல ஆண்டுகளாக, தமிழக அரசு தமிழக மின்சாரத்துறை ஒன்றிய அரசின் மூலமாக பெற வேண்டிய நிலுவையில் இருக்ககூடிய பெற முடியாத சில திட்டங்களை, நம்முடைய உரிமைகளை நாம் கேட்டு பெற வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். அதற்காக, ஒன்றிய அரசின் மின்சாரத் துறை அமைச்சரும் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால், அந்த கருத்தில் இருந்து மாறுபட்டு செல்ல வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இருந்தாலும்கூட நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். என்னவென்றால், கடந்த காலங்களில் தமிழகத்தினுடைய மின்சாரத்துறை மக்களிடத்தில் அவர்களுக்கு அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யமுடியாத நிலையில் இருந்தது. நமக்கு தேவையான மின் உற்பத்தியை நாமே செய்ய முடியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் இருந்தன. இதைத்தான் நடந்து முடிந்த ஆளுநர் உரையிலும் நிதிநிலை அறிக்கையிலும் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆய்வு செய்யப்படும் என்று தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தங்கமணி ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் இந்த சோதனை சம்பந்தமாக ஒருவிதமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். தங்கமணி ஒரு விதமாக கருத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த மூன்று பேரும் உக்கார்ந்து பேசி எல்லோரும் ஒருமித்த கருத்துக்கு வரட்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இவரும் சேர்ந்து இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்று அவர்களுக்குள் ஒரு சுமூகமான ஒரு முடிவை எட்டட்டும். இன்னொன்று திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இப்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் யார் தவறுகள் செய்திருந்தாலும் நிச்சயமாக, நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.
இன்னொன்று நான் அவர்களுக்கு சொல்வது, இந்திய வரலாற்றிலேயே, ஊழல் பணத்தை கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையை தங்கமணி பெற்றிருக்கிறார். இன்னொன்று, கண்பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரண்சி இந்த இரண்டுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய தங்கமணி என் மீது குற்றச்சாட்டு சொல்வது உள்ளபடியே, தங்கமணி என்ன பேசுகிறோம் என்று புரிதல் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.
வடசென்னையில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி கடந்த ஆட்சியில் காணாமல் போயிருக்கிறது. அது சம்பந்தமாக குழு அமைக்கப்பட்டு இப்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதே போல, தூத்துக்குடியிலும் நிலக்கரி காணாமல் போயிருக்கிறது.
நிலக்கரிக்கும் கிரிப்டோ கரண்சிக்கும் பதில் சொல்ல வேண்டிய தங்கமணி என் மீது குற்றச்சாட்டு சொல்வது ஏன் அவருக்கு அந்த பயம் என்று தெரியவில்லை. எதனால், அவருக்கு அந்த பயம் என்று தெரியவில்லை.
உள்ளபடியே தான் தவறு செய்யவில்லை என்று சொன்னால், நான் ஒரு விஷயம் கேட்கிறேன். உங்கள் மூலமாக கேட்கிறேன். 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2016ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது தங்கமணி தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, 2021ம் ஆண்டு தேர்தல் களத்தில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன, இந்த நான்கு தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட சொத்தினுடைய மதிப்பை, ஒப்பிட்டுப் பார்த்து அதனுடைய வித்தியாசங்கள், அது எங்கிருந்து வருமானம் வந்தது என்று அவர் தெளிவுபடுத்திக்கொண்டு, அதற்குப் பிறகு மற்றக் கருத்துகளை சொல்ல வேண்டும். அதில் எவ்வளவு வித்தியாசம் அதிகரித்திருக்கிறது. குடும்பச் சொத்துகள் எவ்வளவு உயர்ந்திருக்கிறது. இது எங்கிருந்து வந்த வருமானம், 2006ல் செய்த தொழில்தான் 2011ல் இருந்திருக்கிறது. 2011ல் செய்த தொழில்தானே 2016ல் இருந்திருக்கிறது. 2016ல் இருந்ததுதானே 2021ல் வந்திருக்கும். ஆக எங்கே இருந்து இந்த சொத்து மதிப்புகள் உயர்ந்தது. எதனடிப்படையில் இந்த வருமானம் அதிகரித்திருக்கிறது. ஊழல் பணத்தில் வந்த அந்த சொத்தினுடைய அதிகரிப்பு, அதை சட்டத்திற்கு உட்பட்டு திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.