தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
சென்னையில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அறை, கரூரில் அவருக்கு சொந்தமான இடங்கள் உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை முதல் சோதனை செய்தனா்.
சுமார் 17 மணி நேர சோதனைக்குப் பிறகு, செந்தில் பாலாஜியை வீட்டில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில், 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குவிரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின் போது சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதன் அடிப்படையின் இன்று ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்தேன், அவர் சோர்வாக காணப்பட்டார். அவரை கைது செய்த போது கடுமையாக நடத்தப்பட்டதாகவும், அவருக்கு இருக்கக்கூடிய இதய நோய் பற்றியும் என்னிடம் தெரிவித்தார்
மேலும் கைது செய்த பொழுது தனக்கு தொந்தரவு கொடுத்த அதிகாரிகளின் பெயரை என்னிடம் கூறினார். புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில்தான் நான் இங்கு வந்தேன். இதைப்பற்றி மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும்
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் அவரை கடுமையான முறையில் கைது செய்துள்ளனர். அவருக்கு காது அருகே வீக்கம் அதிகமாக உள்ளது. தனக்கு நெஞ்சு வலி எனக் கூறியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தன்னை கீழே தள்ளி கைது செய்ததாக கூறினார், என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.
மேலும், மனித உரிமை மீறப்பட்டதாக புகார்கள் வந்தன. புகார் அடிப்படையிலும், தாமாக முன்வந்தும் மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம். தற்போதும் புகார் வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“