தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா். அவரை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி, கடந்த2011-2015 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு 2018-ஆம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தது.
இந்த மோசடியில், சட்டவிரோத பணமோசடி நடந்ததாக, அமலாக்கத் துறையும் ஒரு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கை எதிர்த்து, செந்தில் பாலாஜி உயா்நீதிமன்றத்தில் முறையிட்டதால், மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகளை ரத்து செய்து பிறப்பித்த உயா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி வழங்கியும் உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
இதையடுத்து, சென்னையில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அறை, கரூரில் அவருக்கு சொந்தமான இடங்கள் உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை முதல் சோதனை செய்தனா்.
சுமார் 17 மணி நேர சோதனைக்குப் பிறகு, செந்தில் பாலாஜியை வீட்டில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில், 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குவிரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவமனை பரிந்துரை செய்தது.
இந்நிலையில், , சென்னை கே.கே.நகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் 4 பேர் மருத்துவமனைக்கு வந்தனர். ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவர்களும் பரிந்துரை செய்துள்ளனர்.
செந்தில்பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும் சூழல் இல்லாததால், சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு வந்தார். இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் விசாரணை நடத்தினார். பின்னர், அவரை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து செந்தில்பாலாஜியிடம் இருக்கும் துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிதித்துறை அமைச்சர் தங்கத்தென்னரசிடம் கூடுதலாக மின்சாரத் துறையையும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை கொடுக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது, மதுவிலக்கு - ஆயத்தீர்வைத்துறை ஒரே துறையாக உள்ளது. இதை இரண்டாக பிரித்து மதுவிலக்கு துறையை, ஐ.பெரியசாமிடம் ஒப்படைத்துவிட்டு ஆயத்தீர்வைத் துறையை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சரான மு.பெ.சாமிநாதன் வசம் கூடுதலாக ஒப்படைக்கலாம் அல்லது முதலமைச்சரே கூடுதலாக இந்த துறைகளை கவனிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“