அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி கடந்த 6 மாதங்களாக சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயரில், திமுக இளைஞரணி மாநாடு குறித்து முரசொலியில் முழுபக்க விளம்பரம் வந்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாய்க்கன்பாளையம் பகுதியில் தி.மு.க இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. நாளை (ஜன 21) நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியே பெரும் திருவிழா போன்று உற்சாகத்தில் திளைத்து வருகிறது. இந்த மாநாட்டுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும், மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரெட் அல்வா, உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம் புறநகர் பகுதியில், திருவிழா காலம்போல் ஆங்காங்கே கொண்டாட்டங்களும், மாநாட்டுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ட்ரோன்கள் மூலம் திமுக முன்னாள் தலைவர்கள் புகைப்படங்கள் வானில் ஜொலித்து வருகிறது.
இதனிடையே திமுக இளைஞரணி மாநாடு குறித்து திமுக முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்கள் என பலரும் தங்கள் பெயரில் முழுபக்க விளம்பரங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி கடந்த 6 மாதங்களாக சிறையில் இருக்கும், அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரில், முரசொலி நாளிதழில் முழுபக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதுவரை 10 முறைக்கு மேல் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, சிறையில் இருந்தபடியே கட்சி பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை உறுதி செய்துள்ளார். இந்த விளம்பரத்தில் திமுக அமைச்சர், கரூர் மாவட்ட செயலாளர் என்றும் குறிப்பிடப்படுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“