Minister Senthil Balaji reply to OPS for agriculture electricity meter issue: விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓபிஎஸ்க்கு, இந்த பணிகள் உங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்டது தான் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தபடுவதைப் பற்றி வாய் திறக்கவில்லை எனவும், ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு ஆட்சியில் இல்லாத ஒரு பேச்சு என்று இல்லாமல் விவசாயிகளின் அச்சத்தை நீக்கும் வகையில் மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
மேலும் அந்த அறிக்கையில், ஒரு திட்டத்தை அதிமுக செயல்படுத்தினால் அது ரத்தம், அதே திட்டத்தை திமுக செயல்படுத்தினால் அது தக்காளி சட்னியா என கேள்வி ஓபிஎஸ் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலளிக்கும் வகையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்துவது 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கான மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டாலும், தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கி அதற்கான மானியத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. அவர்கள் வெளியிட்ட இரண்டு அறிக்கையும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று வரலாறு தெரிந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட வேண்டும். விவசாயிகள் நலனில் தமிழக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது. என்று கூறினார்.
மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்து 4.50 லட்சம் மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மேலும், மின்துறையில் இதர பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் என்பது கடந்த அதிமுக ஆட்சியிலேயே 2018ல் இருந்தே கொண்டு வரப்பட்டது. புதிதாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதை போல எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் கூறி வருகிறார். மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil