அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை இன்று (ஜுன் 21) காலை தொடங்கி நடைபெறுகிறது. காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பைபாஸ் அறுவை சிகிச்சை எப்படி நடைபெறும்? எவ்வளவு நேரம் நடைபெறும்? உள்ளிட்டவை குறித்து இருதய நிபுணர் மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம் தகவல் கூறினார். அவர் கூறுகையில், "பைபாஸ் அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் வரை நடைபெறும். ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். சாதாரணமாக 1 முதல் 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்படுவார்கள்.
பைபாஸ் செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வில் இருப்பது அவசியம். பழைய நிலைமைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகும். பைபாஸ் சிகிச்சை பெற்றவர்கள் 7 நாட்களுக்குப் பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். இருப்பினும் பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளைப் பொறுத்து சற்று வேறுபடலாம்" என்று கூறினார்.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் நிலையில் அவர் எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார், எவ்வளவு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தின் 3 முக்கிய குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அறுவை சிசிக்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன் பேரில் அவருக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிசிக்சை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“