தீபாவளி பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொகை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே சமூக ஊடகங்களில் எல்லை தாண்டி மோதல் நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானைக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை ஆனதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மது விற்பனை குறித்து அரசுக்கே இன்னும் முழுமையான தகவல் வரவில்லை அதற்குள் தவறான செய்தி வெளியிட வேண்டாம். தவறான செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தீபாவளி பண்டிகை நாளில் மது விற்பனை குறித்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அதே போல, கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அண்ணாமலையின் விமர்சனத்துக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக பதிலடி கொடுத்து விமர்சனம் செய்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.
இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?
பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா?
அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள்
சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை முதலமைச்சர் வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.
கோவையில் சம்பவம் நடந்தவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன.
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாராய அமைச்சர் என்று விமர்சிக்க, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆடு அல்ல நரி என்று விமர்சிக்க இருவரும் ட்விட்டரில் எல்லை தாண்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி, பா.ஜ.க மதுபான ஆலைகளிடம் இருந்து ரூ. 17 கோடி நிதி பெற்றுள்ளதாக ட்வீட் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில், கடந்த 2020-2021ம் ஆண்டில் சாராய நிறுவனங்களிடமிருந்து பாஜக சுமார் ரூ.17 கோடி நன்கொடையாக பெற்றிருப்பதாக கூறியுள்ளார். மேலும், அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“