பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு மின் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்க மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிடுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள் என்று பதிலடி கொடுத்தார். ஆனால், அண்ணாமலை ஆதாரம் என்று சில கணக்குகளை வெளியிட செந்தில் பாலாஜி அதற்கு உரிய பதிலடி கொடுத்ததால் இருவருக்கும் இடையேயான சவால்களும் வார்த்தைப் போரும் தொடர்கிறது.
இதனைத் தொடர்ந்து, 1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது என மின்வாரிய முறைகேடு குறித்த அண்ணாமலையின் புகாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எனர்ஜி கம்பெனி, 4000 முதல் 5000 கோடி ஆர்டரை தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள உள்ளது. தற்போது அந்த கம்பெனி நொடிந்து போய் உள்ளது.
ஆனால், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் அதை வாங்கி, தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து 4000 கோடி முதல் 5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதை போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு லாபத்தை ஏற்படுத்த இந்த முயற்சி நடக்கிறது. கம்பெனி பெயரை இப்போது குறிப்பிட விரும்பவில்லை.
வேறுவழியில்லை அவர்கள் போகிற பாதை அதை நோக்கி போகிறது. நஷ்டமடைந்த நிறுவனத்தை வாங்கி, மின்சார வாரியத்திடமிருந்து ஒப்பந்தம் போட்டு லாபம் சம்பாதிக்க உள்ளனர். இதனால், மின்சார சப்ளை கூடி விடும் என்று காட்டுவார்கள். திமுக அரசுக்கு இது கை வந்த கலை. எனவே எச்சரிக்கையாக சொல்கிறேன். 2006-11 ஆட்சி கால பாதைக்கு திமுக போகாது என நம்புகிறேன். அப்படி போனால் எங்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது.
எண்ணூர் அனல்மின் நிலையம் (ETPS) விரிவாக்கத்துக்காக, TANGEDCOனால் 30.3.2012 அன்று LANCO நிறுவனத்திற்கு Original proposal வழங்கி, பின்னர் 27.12.2014 அன்று LoA (Letter of Award) வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.1700 கோடி செலவாகி, குறைந்த பணிகளே முடிந்த நிலையில், LANCO நிறுவனம் insolvency ஆகிறது. As is where is என்ற அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி அரசு 02.03.2019 அன்று BGR நிறுவனத்திற்கு, நின்ற பணிகளை துவங்கிட LoA வழங்கி, 01.03.2021 அன்று CTE (Content to Establish) கொடுக்கிறது. பேரம் படியாததால் ஏப்ரல் 2021ல், அந்த ஒப்பந்தத்தை முடித்து கொள்கிறது. BGR நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றம் சென்று வழக்காடி ஒப்பந்தப்படி பணியை ஆரம்பிக்க இருக்கிறது.
இது புது ஒப்பந்தமில்லை. பாஜகவும் அதிமுகவும் கூட்டணியாய் இருந்த போது நடந்த ஒப்பந்தம். ஒப்பந்த தொகையும் எடப்பாடி பழனிசாமி அரசு நிர்ணயம் செய்ததே. இவை எல்லாமே முழுக்க அதிமுக ஆட்சியில் நடந்தவைகள். தெரிந்து சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள். இருவரது நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு, பணி ஆரம்பிக்கப்பட்ட பின், மேலும் காலம் தாழ்த்தாமல் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே சவால்களும் வார்த்தைப் போர்களும் தொடர்ந்து வருகிறது. இருவரும் மாறி மாறி பதிலடி கொடுத்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதனால், தமிழக அரசியல் பார்வையாளர்களும் சமூக ஊடகங்களில் அரசியல் பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்களும் இதில், வெல்லப் போவது அண்ணாமலையா, அமைச்சர் செந்தில் பாலாஜியா என்று உன்னிப்பாக பார்த்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“