தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன், சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் வசதி அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ’மக்கள் சபை’ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோயம்புத்தூர் மாநகராட்சியில் 85 முதல் 100 வரையிலான வார்டுகளில் சுமார் 17 இடங்களில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
அப்போது, பேசிய அமைச்சர், மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் கோரி பலர் மனு அளித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் விண்ணப்பித்து விட்டு வேறு மாவட்டத்திற்கு குடியேறியவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீர், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தடி நீர் வடிகால் (UGD) பணிகள் முழுமையடையாமல் உள்ளது. அதற்கு தேவையான நிதியை பெற்று அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். மாநகராட்சி எல்லையில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும், என்று பேசினார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளையும் தனது சொந்த தொகுதிகளாகக் கருதி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்றும், ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலே 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.
பின்னர் மின் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக பேசிய அமைச்சர், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் வீடுகளில் மின் அளவீடு பதிவு செய்யும் பணியில் ஐந்து சதவீத பணியாளர்கள் காலியாக உள்ளனர். இந்த காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்படும், இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன், சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil