சென்னையில் செப்டம்பர் மாதம் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டே பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து விசாரைணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மற்றும் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று (நவ.7) விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் சேகர் பாபு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “சனாதனம் என்பதும் இந்துமதம் என்பதும் ஒன்றுதான் எனக் கூறுவதை மறுக்கிறோம். தஞ்சாவூர் பெரியக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சனாதன தர்மத்தை ஏற்கவில்லை.
நான் ஒரு தீவிரமான ஐயப்ப பக்தர். இந்துவாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். என்னால் மனிதனால் உருவாக்கப்பட்ட சனாதன தர்மத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.
மேலும் மனு ஸ்மிருதியை அடிப்படையாக கொண்ட சனாதன தர்மத்தை எதிர்த்து பேசியதில் எந்தத் தவறும் இல்லை. மனு ஸ்மிருதிக்கு எதிராக பேசுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக எப்படி அமையும்? ஆரியர்களுக்கான சட்டம் ஆரியர்களுக்குதான், அது தமிழர்களுக்கு அல்ல.
மேலும், அரசியல் சாசனத்துக்கு விரோதமான இந்த வழக்கை தாக்கல் செய்தவருக்கு அதிகப்பட்ச அபராதம் விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இந்துக் கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால்தான் இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனவும் சேகர் பாபு தரப்பில் வழக்கறிஞர் வாதம் செய்தார்.
சென்னையில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்று நோய். சனாதனத்தை எதிர்க்கக் கூடாது, ஒழித்தே ஆக வேண்டும் என பேசினார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“