கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவமனை: சேகர் பாபு தகவல்
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனை இருக்கும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும் மழைநீர் வடிகால் பணிகளை நவ.15ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (அக்.31) காலை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, 'கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இணைப்பு சாலைகள், மழை நீர் வடிகால் பணிகளை நவம்பர் 15-க்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். சென்னையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் இணைப்பு சாலைகள், வடிகால் அமைக்கும் பணிகள் முடிவடையாததால், திட்டமிட்டபடி, தீபாவளி பண்டிகைக்குள் திறக்க முடியவில்லை.
Advertisment
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “இந்தப் பேருந்து நிலையத்தில் தினமும் 400 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்பட்டுவருகிறது.
பேருந்து நிலையத்தில் மழை நீர் தங்காத வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக ரூ.17 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன.
அதேபோல் வாகனங்கள் வந்து செல்ல புதிய நுழைவு வாயில் அமைக்கப்படும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தில் காவல் நிலையம், மருத்துவமனை அமைக்கப்படும். பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறந்துவைப்பார்” என்றார். அப்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் சமய மூர்த்தி, குழும உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், அதிகாரிகள் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“