அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய விரும்பாத பெண்கள் காசு கொடுத்து டிக்கெட் பெற்று பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி பரவி வரும் நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில், தமிழ்நாசு அரசின் போக்குவரத்துத் துறையில் செயல்படும் அரசு நகர சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் காசு கொடுத்து பயணச் சீட்டு எடுக்காமல் இலவசமாக, பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அதன்படி, அரசு நகர சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
அண்மையில், திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தைக் குறிப்பிட்டு, இப்போது எல்லாம் பெண்கள் பேருந்திள் ஓசியில் போகிறார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் பொன்முடியின் பேச்சிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தான் வழக்கு மொழியில் விளையாட்டாக ஓசியென கூறியதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டதாகவும் அதை பெறிதுபடுத்த வேண்டாம் என விளக்கமளித்தார்.
இதனிடையே, கோவையில் மூதாட்டி ஒருவர், இலவசமாக பேருந்தில் பயணிக்க மாட்டேன் என்றும் டிக்கெட்டிற்கு பணம் கொடுத்து தான் பயணிப்பேன் என நடத்துநரிடம் அடம் பிடித்த வீடியோ வைரலானது. ஆனால், அந்த மூதாட்டி அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் இப்பட் செய்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, இலவசமாக பயணம் செய்ய விரும்பாத பெண்கள் காசு கொடுத்து பயணச்சீட்டு வாங்கி பயணிக்கலாம் என போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது எனவும் வேண்டுமென்றால் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அது உண்மையில்லை, வதந்தி என விளக்கம் அளித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"