/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sivashankar.jpg)
அரசுப் பேருந்துகளில் இருந்து 'தமிழ்நாடு' என்ற வார்த்தை நீக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைகளுக்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகைகளில் இருந்து 'தமிழ்நாடு' என்ற சொல் நீக்கப்பட்டதாக அண்மையில் எழுந்த சர்ச்சைகளுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். இந்தப் பெயர் மாற்றம் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே, சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே தொடங்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 'அரசுப் போக்குவரத்து கழகம்' என்று மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், திருநெல்வேலி' என்று முழுமையாக எழுதும்போது, பெயர் நீளமாகவும், படிக்கக் கடினமாகவும் இருந்ததாலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சிலர் பழைய செய்திகளைப் போலப் பரப்பி, தேவையில்லாத சர்ச்சைகளை வேண்டுமென்றே கிளப்பிக் கொண்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார். பழைய பேருந்துகள் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வந்தாலும், முதலமைச்சர் பல புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்துள்ளதாகவும், மேலும் பல புதிய பேருந்துகளை விரைவில் கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் பல பிரச்சினைகள் தீர்ந்து வரும் நிலையில், வேறு என்ன குறை கூறுவது என்று தெரியாத காரணத்தால், இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.