/indian-express-tamil/media/media_files/uQPpz1LuyCSIbSDGTDz8.jpg)
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வாசலுக்கும் இடையே வெள்ளாறு ஓடுகிறது. இதில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரி தங்களுக்கு தான் சொந்தம் என சன்னாசிநல்லூர் மக்கள் கூறிவந்த நிலையில், அங்குள்ள மயானம் வரையிலும் மணல் அள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் கடந்த 03.01.2015 அன்று ஆற்றை அளவீடு செய்து கல் வைத்து பிரித்தனர்.
ஆனால், சன்னாசிநல்லூர் மக்கள் அதை ஏற்காமல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரும் பங்கேற்றார். போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததில் 9 போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மணல் அள்ளும் இயந்திரங்களும் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் சிவசங்கர் உட்பட 37 பேர் மீது ஆவினன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கரிடம், நேற்று திருச்சியில் அரசுப் பேருந்து ஒன்றில் இருக்கையுடன் நடத்துநர் சாலையில் கீழே விழுந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்; அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. புதிதாக 7,000 பேருந்துகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். 350 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய பேருந்துகள் வர வர, பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றப்படும். இந்த ஆண்டுக்குள் 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் முழுமையாக மாற்றப்படும் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.