உள்ளாட்சி துறை முறைகேடுகளில் தனக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பேசுவதற்கு தடை விதிக்க கோரிய மனுவை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திரும்ப பெற்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்புப் பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்குவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளிள் அதிக ஊழல் நடந்து இருப்பதால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும் என்றும் மக்களவை தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன்னை பற்றி பேச ஸ்டாலின் தடை விதிக்கவும் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தன்னை பற்றி பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிய இடைக்கல மனுவை மட்டும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுப்பிரமணியன், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்ததுடன், பேச தடை கோரிய இடைக்கால மனுவை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.