உள்ளாட்சித் துறை ஊழல் புகார்: ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி சவால்!

ஒருவேளை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியை துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியை தர வேண்டும்

உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் வேலுமணி, குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக்கொடுத்து உள்ளாட்சித்துறையை கொள்ளையாட்சி துறையாக உருக்குலைத்திருக்கிறார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான இந்த ஊழல் புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சட்ட நெறிமுறைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த பதவியில் நீடிப்பதற்கு தார்மீக ரீதியாக சிறிதும் தகுதியற்றவர் என்பதால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் நியாயமான நேர்மையான சட்டத்திற்குட்பட்ட வெளிப்படையான விசாரணைக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “உள்ளாட்சித் துறையில் விதிகளை மீறி எந்த டெண்டரும் விடப்படவில்லை. அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்து விட்டால், நான் பதவி விலகத் தயார். அதுமட்டுமின்றி, அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். அப்படி ஒருவேளை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியை துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியை தர வேண்டும்” என்று சவால் விடுத்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close