அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அரசு காண்ட்ராக்டுகள் கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து, அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டு அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது சகோதரர், நண்பர்கள் நிர்வகிக்கும் கேசிபி இன்ஜினியர்ஸ், வர்தன் இன்ஃபராஸ்ட்ரக்சர், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு காண்ட்ராக்ட் பணிகளை கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அமைச்சரின் சகோதரர் பி அன்பரசனின் பி செந்தில் அன் கோ நிறுவனத்துக்கு ரூ. 80 கோடி மதிப்பில் அரசு காண்ட்ராக்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் நெருங்கிய நட்பில் உள்ள ரஞ்சன் சந்திரசேகரின் கேசிபி இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு ரூ. 150 கோடி அரசு காண்ட்ராக்ட் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.பி வேலுமணியின் சகோதரர், நண்பர்களின் நிறுவனத்துக்கு ரூ 100 கோடிக்கும் அதிகமாக லாபம் கிடைக்கும் வகையிலான பல அரசு காண்ட்ராக்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஊழல் புகார் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் வேலுமணி ஏற்கனவே மறுத்திருந்த நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வேலுமணி கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பதவியை பயன்படுத்தி எந்த திட்டத்தையும் யாருக்கும் ஒதுக்கியது கிடையாது. எல்லாமே விதிமுறைக்கு உட்பட்டு நடந்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளோம். இப்போதும் வெற்றி பெறுவோம். என் மீது அவதூறு செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்' என்றார்.
மேலும் பேசிய அமைச்சர், குட்கா வழக்கு விசாரணையில் இருக்கும் போது கருத்து கூற முடியாது. தவறு செய்யும் பட்சத்தில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இந்த ஆட்சி, கட்சியை காப்பாற்றுவதற்காக எதற்கும் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.