chennai water problem : தண்ணீர் பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற சொற்களே சமீப காலங்களில் தமிழகத்தில் எங்கும் ஒலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் நீர் நிலைகள் வறண்டு போனது. இதனால் மக்களின் நீராதாரமும் இல்லாமல் போனதால் தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
மழை நீர் சேகரிப்பு இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பணிபுரியும் இடங்களிலும் இதே நிலையை சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனிகளிலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், பள்ளிகளிலும் குழந்தைகளை வீட்டிலிருந்தே குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இப்படி தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கோண்டிருக்கும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்றைய தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கடுமையான கோபத்தில் ஆழ்த்தியது.
முதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்ததாவது, “ கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்குக் குடிநீர் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடர்பாகத் தமிழக முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை எனப் பதில் கொடுத்தனர்.” என்று தெரிவித்திருந்தார்.
சென்னையில் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் வேளையில் கேரளம் குடிநீர் தர முன்வந்தும் அரசு அதை மறுத்தது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த செய்திகள் காட்டுத்தீ போல் சமூகவலைத்தளங்களில் நேற்று மாலை முதல் பரவத் தொடங்கினர்.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,
மாண்புமிகு கேரள முதலமைச்சரின் @CMOKerala செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் @CMOTamilNadu செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார்.
— SP Velumani (@SPVelumanicbe) 20 June 2019
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும்,குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.
— SP Velumani (@SPVelumanicbe) 20 June 2019
சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
— SP Velumani (@SPVelumanicbe) 20 June 2019
இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilNadu அவர்கள் உரிய முடிவினை அறிவிப்பார்கள்.
— SP Velumani (@SPVelumanicbe) 20 June 2019
இதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilNadu அவர்கள் கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
— SP Velumani (@SPVelumanicbe) 20 June 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.