/indian-express-tamil/media/media_files/2025/06/03/EoHAQWfc8so6ecN5pHQZ.jpg)
சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்திருந்தபோதிலும் ஒன்றிய அரசு டீசல் விலையைக் குறைக்கவில்லை. இருந்தாலும், பொதுமக்கள் மீது அந்த சுமை வரக்கூடாது. பேருந்து கட்டணத்தை உயர்த்துகிற எண்ணத்தில் தமிழ்நாடு அரசு இல்லை என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். (Image grab from x/PTTVOnlineNews
சென்னையில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தபட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை, அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திலும் எடுத்துரைப்போம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார்.
பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் நிச்சயமாக இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். முதலமைச்சரும் போக்குவரத்துத் துறைக்கு அதே அறிவுரையைத்தான் வழங்கியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயர்ந்தபோதும்கூட நாம் பேருந்து கட்டணம் உயர்த்தவில்லை. இப்பொழுது சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்திருந்தபோதிலும் ஒன்றிய அரசு டீசல் விலையைக் குறைக்கவில்லை. இருந்தாலும், பொதுமக்கள் மீது அந்த சுமை வரக்கூடாது. பேருந்து கட்டணத்தை உயர்த்துகிற எண்ணத்தில் தமிழ்நாடு அரசு இல்லை.
தனியார் பேருந்து கட்டணம் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “தனியார் பேருந்து கட்டணம் உயரவில்லை என்ற கருத்தின் காரணமாகத்தான் அவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடி சென்றிருக்கிறார்கள். நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரைப்படி, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அந்த கருத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு, நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பார்த்து அரசு முடிவெடுக்கும்.
தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்பது போல நீதிமன்றத் தீர்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “நம்முடைய அரசுப் பேருந்து கட்டணம் உயர்ந்தால்தான் தனியார் பேருந்து கட்டணமும் உயரும் என்பது தமிழ்நாட்டில் இருக்கும் நடைமுறை. அவர்கள், தங்களுக்கு தனியாக பேருந்துக் கட்டணம் உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். தமிழக அரசினுடைய நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்படும். நீதிமன்றத்தின் முடிவு வந்த பிறகு, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய அறிவுரைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.