சில போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படும் என்று கூறினார்கள், ஆனால், பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது, மக்கள் விருப்பத்தை அரசு நிறைவேற்றும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறியதாவது: “ஒரு பேச்சுவார்த்தை என்றால் இரண்டு பக்கமும் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் 6 கோரிக்கைகளை சொன்னார்கள். ஏற்கெனவே 2 நடைமுறையில் இருக்கிறது. மேலும், 2 கோரிக்கைகளை செய்து கொடுப்பதற்கு உறுதி அளித்திருக்கிறோம். 6 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகள் நிறைவேறி இருக்கிறது என்கிறபோது, அவர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.
ஒரு மாத காலம் நேரம் அளிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் அதற்கு ஒரு எழுத்துத் தேர்வை நடத்தி, அதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு வெளியிட்ட பிறகு, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணல் நடந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி முதல்வாரம் முதல் இந்த நேர்காணல் செல்ல இருக்கிறது.
அவர்கள் சொல்வது போல, இது விளையாட்டான விஷயமல்ல, ஒரு அரசு நடைமுறைப்படி நடக்க வேண்டிய சூழலில் நடந்துகொண்டிருக்கிறது. இது பத்திரிகை படிப்பவர்களுக்கு தெரியும், அவர்களுக்கும் தெரியும், ஆனால், தெரிந்தும் ஏன் இந்த கோரிக்கையை வைக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
தற்காலிக ஓட்டுநர்கள் எவ்வளவு பேர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், எந்த இடத்தில் தேவைப்படுகிறதோ அதற்கு தகுந்த மாதிரி பயன்படுத்தச் சொல்லியிருக்கிறோம். பெரும்பாலும் அரசு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வந்திருக்கிறார்கள். சில இடங்களில் போக்குவரத்து வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்ற சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வராத இடத்தில் தற்காலிக ஓட்டுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
வேலை நிறுத்தம் அறிவித்துள்ள போக்குவரத்து சங்கங்கள், கடந்த ஆட்சிக் காலத்தில் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் போனது. ஆனால், இந்த ஆட்சியில் தமிழக முதல்வரை நம்பினோம், ஆனால், நிறைவேறவில்லை என்று கூறுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “கடந்த ஆட்சியில் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி இருந்தது என்றால், அது சீர்குலைக்கப்பட்டிருந்தது. அதை இந்த ஊதிய ஒப்பந்தத்தில், பே மேபிக்ஸ் என்ற அடிப்படையில் முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். 5 சதவிகித சம்பள உயர்வு வழங்கியிருக்கிறார். 14-வது ஊதிய ஒப்பந்தம் அ.தி.மு.க ஆட்சியில் பேசி முடிக்கப்படவில்லை. ஆட்சி முடிகின்றபோது பேசி முடிக்கப்படவில்லை. அவர்கள் முடிக்காமல் விட்ட பேச்சுவார்த்தையை முடித்து, எந்த போராட்டமும் இல்லாமல் பேமேபிக்ஸ் வழங்கப்பட்டது. எந்த போராட்டமும் இல்லாமல் 5 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதே போல, கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போனஸ் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது.
யாரும் போராடாமலேயே இப்போது அந்த 20 சதவீத போனஸை மீண்டும் வழங்கி இருக்கிறார். எனவே, போராடாமலேயே இதையெல்லாம் முதலமைசர் மு.க. ஸ்டாலின் எப்படி செய்தாரோ, அதே போல இதையும் செய்வார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை அரசின் நிதிநிலைக்கு தகுந்தாற்போல், ஒவ்வொன்றாக செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
மகளீருகான உரிமைத் தொகை திட்டம் எப்போது, எப்போது என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். நிதி நிலைமையை சரி செய்த பிறகு அதை அளித்திருக்கிறார்.
அதே போன்று, இந்த துறையில் இருக்கிற கோரிக்கைகள் போல, பல்வேறு துறைகளில் இருக்கின்ற ஊழியர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருக்கிறது. அந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் எவ்வளவு செலவாகும் என்று மொத்தமாக கணக்கிட்டுதான் ஒரு அரசு செயல்பட முடியும். எனவே, அதற்கான கால அவகாசம் தான் கேட்டிருக்கிறோம். முடியாது என்று சொல்லவில்லை. ஏனென்றால், கடந்த அ.தி.மு.க ஆட்சி போல, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத அரசாக இந்த அரசு இல்லை. எஸ்மா, டெஸ்மா சட்டம் கொண்டுவந்து இந்த அரசு யாரையும் நீக்கவில்லை. இரும்புக் கரம் கொண்டு போராட்டத்தை அடக்கி ஒடுக்கவில்லை. உங்கள் கோரிக்கைகள் நியாயமானது. கேட்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், உங்கள் கோரிக்கைகளுக்கு நியாயமான முறையில் போராடுங்கள் என்று சொல்லியிருக்கிறோம்.
மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்குகிற சூழல் உள்ளது. முதல்வர் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். எனவே, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் கேட்டிருக்கிறோம் என்று கூறினார்.
இதையடுத்து, தற்போது தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை, நாளை மறுநாள் நீடித்தால், போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்படும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறுகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “பார்க்கத்தான் போகிறோம். இன்றைக்கு இப்படிதான் சொன்னார்கள், பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. நாங்கள் இயக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மக்களுக்காக நீங்களும் இயக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறோம். மக்கள் விரும்புகிறார்கள். மக்களைப் பொறுத்தவரை, எங்களுக்கு பேருந்து ஓட வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்ய வேண்டியது அரசின் கடமை. அதை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.