தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிக்கும் விதமாக ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என். ரவி மன்னிப்பு கேட்க வேண்டும், நீட்டிப்பு வழங்கப்படாததால் அவர் அந்த பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சட்டசபையில் எழுப்பும் விதமாக, தமிழ்நாடு சட்டசபைக்கு இன்று அ.தி.மு.க உறுப்பினர்கள் ‘யார் அந்த sir?’ என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும், தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கோஷம் எழுப்பி, அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டு சென்றார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் ஆளுநர் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க, பா.ம.க எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிக்கும் விதமாக ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என். ரவி மன்னிப்பு கேட்க வேண்டும், நீட்டிப்பு வழங்கப்படாததால் அவர் அந்த பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறியதாவது: “ஆளுநர் உரை வாசித்தால் இந்த திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனைகளை வரிசையாக அடுக்க வேண்டிய சூழல் வரும் என்ற காரணத்தினால் இந்த அரசினுடைய சாதனைகளை மக்களிடத்திலே கொண்டு சேர்க்கக்கூடாது என்கின்ற எண்ணத்தினாலும் தான் அவர் இன்றைக்கு இப்படி நடந்து கொண்டார். ஆளுநர் உரை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகள் முழுவதும் இருக்கின்ற வகையில் இருக்கிறது, அதை படிப்பதற்கு தயங்கி கொண்டு தான் இந்த நாடகத்தை நடத்தி இருக்கின்றார். கடந்த முறை ஆளுநர் உரையில், தலைவர்களுடைய பெயரை சொல்லாமல் மறைத்தவர் இன்றைக்கு ஒட்டுமொத்தமாக இந்த ஆளுநர் உரையை புறக்கணித்து சென்றிருக்கின்றார். அதற்கு அவர் சொல்லியிருக்கின்ற காரணம் தேசிய கீதம் பாடப்படவில்லை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்று சொல்கிறார்.
ஏதோ தேச பக்திக்கு அவர்தான் ஒட்டுமொத்த குத்தகைதாரர் என்பது போல் பேசுகிறார். தேசபக்தியில் தமிழ்நாட்டு மக்களை மிஞ்சி அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. இந்த தேசத்திற்காக தம்மை அர்ப்பணித்த தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து பலரும் தோன்றி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தன் உயிரை ஈந்து அர்ப்பணித்திருக்கிறார்கள். இவருக்கு முன்பு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு அந்த போராட்டத்தின் காரணமாக தியாகி என்று அழைக்கிற அளவுக்கு இருந்தவர்கள் ஆளுநரர்களாக இருந்திருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸில் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள், அவர்கள் யாரும் இந்த கூற்றை முன் வைக்கவில்லை. ஏதோ இவருக்கு தேசபக்தி பீறிட்டு வந்தது போல, தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று சொல்கிறார். இதுவரை எத்தனை ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள், எத்தனை முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் இந்த எண்ணம் கிடையாதா? இன்னும் சொல்லப்போனால் இதற்கு முன்பாக அ.தி.மு.க ஆட்சியிலே அவர்களும் பா.ஜ.க-வும் எவ்வளவு அன்னியோன்யமானவர்கள், ஆனால், அவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடிவிட்டு, அவை முடிகின்ற பொழுது தேசிய கீதத்தை பாடுவது இயல்பாக இருந்தது. அப்படித்தான் இன்றைக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து துவங்கி ஆளுநர் உரையை அவைத்தலைவர் வசித்த பிறகு இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கான மரியாதை செலுத்தி தான் தேசிய கீதமும் இன்றைக்கு பாடப்பட்டிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டு மக்கள் தேசிய கீதத்திற்கு எந்த விதத்திலும் அவமரியாதை செய்பவர்கள் கிடையாது, தமிழ்நாடு சட்டப்பேரவை அவமரியாதை செய்வது கிடையாது.
எனவே, தவறான இந்த வாதத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்துவதற்கு முன் வந்த ஆளுநர் இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே, அவருடைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களால் அவர் புறம் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார். பல்வேறு விஷயங்களில், அவர் தான் ஒரு நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பதை மறந்து, ஏதோ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைவிட தான் பெரியவர் என்கிற ஒரு சிந்தனையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாகவே, ஆளுநர் ரவி வெளியேறு என்கிற கோஷம் எழுகின்ற ஒரு நிலையை அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே, அவர் இன்றைக்கு அவையை அவமதித்ததை முன்னிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தி.மு.க-வை பொருத்தவரை தேசபக்தியில் இவர்களுக்கு எல்லாம் ஒன்றும் குறைந்தவர்கள் கிடையாது. எங்கள் முதல்வருக்கோ தி.மு.க-வுக்கோ பாடம் நடத்துகின்ற தகுதி இவருக்கு கிடையாது. சீன போர் தொடங்கி கார்கில் போர் வரை தி.மு.க தனிப்பட்ட முறையில் அதற்கான நிதி வழங்கி இருந்தாலும் அரசின் சார்பாக வழங்கியதாக இருந்தாலும் மற்ற மாநிலங்களை விட மிஞ்சுகின்ற அளவுக்கு தான் தன்னுடைய பங்கை ஆற்றி வந்திருக்கின்றது. இன்றைய ஆளுநர் உரையின் முடிவில்கூட ‘வாழ்க பாரத மணித் திருநாடு’ என்றுதான் முடித்திருக்கிறோம். எனவே தேசபக்தியிலோ, தேச ஒற்றுமையிலோ தி.மு.க-வுக்கு பாடம் நடத்துகிறேன் என்கிற தோரணையில், இந்த அரசினுடைய சாதனைகளை மறைப்பதற்கான நடவடிக்கைகளோ அல்லது தமிழகத்தை அல்லது தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதிக்கின்ற விதத்தில் அவர் நடந்து கொண்டது சரியல்ல. அவருடைய ஒரே நோக்கம் தமிழ்நாடு அரசினுடைய சாதனைகளை எடுத்துக் கூறக்கூடாது என்பதுதான். இன்னும் சொல்லப்போனால் தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் ரவி தான். தேசிய கீதம் பாடுகின்ற வரை இருக்காமல் உடனடியாக அவர் வெளிநடப்பு செய்கிறார். கடந்த ஆண்டும் பல்வேறு திருத்தங்களை செய்து அந்த அறிக்கையை வாசித்தார். அதற்குப் பிறகு தேசிய கீதம் பாடுகிற வரை காத்திருக்காமல் தேசிய கீதத்தை புறக்கணித்து கடந்த முறை வெளிநடப்பு செய்தார், இந்த முறையும் அவர்தான் தேசிய கீதத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதற்காக அவர்தான் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.