கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது அனல் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி. இந்த நிறுவனத்தின் சுரங்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையப்படுத்தப்பட்டது.
அதற்கான பணிகள் முடிந்து, தற்போது குழாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் கையப்படுத்தப்பட்ட நிலத்தில், நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது என்.எல்.சி நிர்வாகம் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி, அதன் தலைவர் அன்புமணி தலைமையில் இன்று என்.எல்.சி.,யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.
அப்போது பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்துச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அன்புமணி அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார், காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பா.ம.க.,வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அன்புமணி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.,வினர் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது; பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
மேலும், “அறவழியில் போராட தமிழக அரசு அனுமதி வழங்கியது” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“